ஆரோக்கியம் ,போசாக்கு, தரக்கட்டுப்பாட்டு முதலானவற்றைப் பேணுவதில் ஹலால் உணவின் முக்கியத்துவம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல அல்லாஹ்வை போற்றி ஆரம்பம் செய்கிறேன்.

இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ( ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ்!

இங்கே கொடுக்கப்பட்ட தலைப்பு?

🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
ஆரோக்கியம், போசாக்கு, தரக்கட்டுப்பாடு முதலானவற்றைப் பேணுவதில் ஹலால் உணவின் முக்கியத்துவம்
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

உணவுப் பொருட்கள் தொடர்பாக இஸ்லாம் கூறும் ஹலால், ஹராம் வரையரைகளை விளக்குவதற்கூடாக சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் தரக்கட்டுப்பாடு என்பவற்றைப் பேணுவதில் ஹலால் உணவின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும். உணவு தொடர்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடுகள், பழக்கவழக்கங்கள் ஆகியவை பற்றி ஒரு சரியான புரிதலை இவ்வாய்வு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாய்வு இரு பகுதிகளைக் கொண்டதாக அமைகின்றது. அவையாவன:

   1. ஹராமான உணவுப் பொருட்களின் விபரம்
   2. ஹராமான உணவுப் பொருட்களை உட்கொள்வதால் விளையும் கேடுகள்

உணவு மனித வாழ்வில் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகும். உண்ணும் உணவு ஹலாலாக இருத்தல் வேண்டும் என்பதை இஸ்லாம் பெரிதும் வலியுறுத்துகிறது. இதுபற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் ஹலாலானதும் சுத்தமானதுமான பண்டங்களையே புசியுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாக இருக்கின்றான். (அல்பகரா:168)
தூதர்களே! பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான், நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றேன்.(அல்முஃமினூன்: 51)

ஓர் இறைவிசுவாசியின் சன்மார்க்க வாழ்வு வெற்றிபெற அவன் உட்கொள்ளும் உணவு ஹலாலானதாக, சட்டபூர்வமானதாக அமைதல் முக்கியமானது. மட்டுமல்ல அவனது வணக்க வழிபாடுகள், நற்கருமங்கள் உட்பட எல்லா செயற்பாடுகளும் அங்கீகரிக்கப்படுவதும், செல்லுபடியாவதும் அதிலே தங்கியுள்ளது. இது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
அல்லாஹ் நல்லவன், அவன் நல்லவற்றையே ஏற்றுக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் எந்த விடயங்களை தூதர்களுக்கு ஏவினானோ அந்த விடயங்களையே முஃமின்களுக்கும் ஏவினான். தூதர்களே! நல்லவற்றைச் சாப்பிட்டு நல்லமல் புரியுங்கள் என்றும், உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து நல்லவற்றைச் சாப்பிடுங்கள் என்றும் அல்லாஹ் கூறினான். பின்னர் நீண்ட பிரயாணத்தில் ஈடுபட்ட ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டு, அவன் உடலெங்கும் புழுதி படிந்த நிலையிலும், பரட்டைத் தலையுடனும் வானத்தின் பக்கம் தனது கைகளையுயர்த்தி, எனது இறைவனே! எனது இறைவனே! என அழைக்கிறான். ஆனால் அவனது உணவு ஹராம், பானம் ஹராம், அவனது ஆடை ஹராம். ஹராத்திலேயே அவன் போஷிக்கப்பட்டிருக்கின்றான். அவனுடைய பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?! (அஹ்மத், முஸ்லிம், திர்மிதி)

ஓர் உணவுப் பொருள் இரண்டு அடிப்படைகளில் ஹராமாகின்றது:

   1. ஹராமான பொருளீட்டலின் காரணமாக அந்த வருமானத்திலிருந்து பெறப்படும் உணவு
   2. தன்னிலேயே ஹராமான உணவு வகைகள்.

அல்குர்ஆனும் சுன்னாவும் இந்த உணவுகளைப் பற்றி விபரித்துள்ளன:
(விசுவாசிகளே! புசிப்பதற்கு) உங்களுக்குத் தடுக்கப்பட்டவை எல்லாம் (தானாக) இறந்தவையும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் (அறுக்கும் போது) அல்லாஹ் அல்லாத பெயர் கூறப் பெற்றவைகளும், கழுத்து நெருங்கி இறந்தவையும், அடிபட்டு இறந்தவையும், கொம்பால் குத்தப்பட்டு இறந்தவையும், ஐவாய் மிருகங்கள் கடித்து இறந்தவையும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முறைப்படி நீங்கள் அறுத்தவற்றைத் தவிர. மேலும் நட்டு வைக்கப்பட்டுள்ளவற்றுக்காக அறுக்கப்பட்டவையும், அம்பு எய்து பாகம் பிரித்துக் கொள்வதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) இவை யாவும் பாவங்களாகும்.

ஸூறா அல்அன்ஆமின் 145ம் வசனம் ஹராமான சில உணவுகளின் விபரத்தை பின்வருமாறு விளக்குகிறது:

(நபியே!) நீர் கூறும்: மனிதன் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹியில் நான் காணவில்லை. ஆயினும் செத்தவை, வடியக் கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாக இருப்பதால் (அதுவும்) தடுக்கப்பட்டுள்ளன. தவிர வரம்புமீறிப் பாவம் செய்யும் நோக்கமின்றி, எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு (அவற்றைப் புசித்து) விட்டால் (அது அவர்கள் மீது குற்றமாகாது) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிப்போனும் அன்புடையோனுமாக இருக்கிறான்.

மேலும் உணவுப் பொருட்களின் ஹலால் ஹராம் தன்மையை நிர்ணயிக்கின்ற மற்றுமோர் அடிப்படையான, அறுப்பு முறையைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

உணவுகள் இருவகைப்படும் : ஒன்று - உயிரற்ற சடப்பொருட்கள். அடுத்தது- விலங்குகள். சடப்பொருட்கள் அனைத்தும் ஹலாலானவையாகும். இவற்றுள் பின்வருவன மட்டும் ஹராமானவையாகக் கொள்ளப்படும்:

. நஜீஸானவை (உ-ம்: இரத்தம்)

. நஜீஸுடன் கலந்தவை (உ-ம்: செத்த எலி விழுந்துள்ள வெண்ணெய்)

. உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. நஞ்சு, நச்சுத் தாவரங்கள், கல், மண், கரி, போதையை ஏற்படுத்துபவை முதலானவை. புகைத்தலும் இதில் அடங்கும்.

. பிறரின் உரிமையுடன் தொடர்பான பொருட்கள் (உ-ம்: திருடப்பட்ட பொருட்கள், அபகரிக்கப்பட்ட பொருட்கள்)

மிருகங்களைப் பொறுத்தவரையில் அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. கடல்வாழ் மிருகங்கள்
2. தரைவாழ் மிருகங்கள்

கடலில் வாழும் மிருகங்கள் அனைத்தும் ஹலாலானவையாகும். தரைவாழ் மிருகங்களைப் பொறுத்தமட்டில் அவற்றுள் உண்ண ஹலாலானவையும், ஹராமானவையும் உண்டு.
கடலில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஹலாலானவை எனக் குறிப்பிட்டோம். அவற்றை அறுக்க வேண்டிய தேவையில்லை.
இதற்குப் பின்வரும் அல்குர்ஆன் வசனம் ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.

கடலில் வேட்டையாடுவதும் அதனை உணவாகக் கொள்வதும் உங்களுக்கும் யாத்திரிகர்களுக்கும் பயன்கருதி அனுமதிக்கப்பட்டுள்ளன. (அல் மாயிதா: 96)

இங்கு கடல் உணவு என்பது கடலில் இறந்தவற்றையும் குறிக்குமென இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்குகிறார்கள்.
ஒரு மனிதர் நபியவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே, நாம் கடல் மார்க்கமாக பயணம் செய்கின்றோம். எம்மிடம் குறைவான நீரே இருக்கிறது. அதனை நாம் வுழூ செய்யப் பயன்படுத்தினால் தாகத்திற்குக் குடிக்க நீர் இல்லாமல் போய்விடும். எனவே, கடல் நீரால் எமக்கு வுழூ செய்ய முடியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், அதன் (கடலின்) தண்ணீர் அதி சுத்தமானது. அதில் இறந்தவையும் ஹலாலானது| என்றார்கள்.(ஐந்து கிரந்தங்கள்)

கடலிலும் கரையிலும் (இரண்டிலும்) வாழும் உயிரினங்களின் நிலை பற்றி புகஹாக்கள் (சட்ட நிபுணர்கள்) மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது.

இனி தரைவாழ் மிருகங்களில் ஹலாலானவை பற்றிய விபரத்தை நோக்குவோம். அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
கால்நடைகளையும் அவனே படைத்திருக்கிறான். அவற்றில் உங்களுக்கு (குளிரைத் தடுக்கும்) சூடும் மற்றும் பல பயன்களும் உண்டு. அவற்றில் சிலவற்றை நீங்கள் உணவாக உட்கொள்கிறீர்கள். (அந்நஹ்ல் : 05)

இங்கு கால்நடைகளைக் குறிக்க அல்அன்ஆம் எனும் சொல்லை அல்குர்ஆன் பயன்படுத்தியுள்ளது.

இதில் ஒட்டகம், மாடு, எருமை மாடு, ஆடு, மான், மரை போன்ற அனைத்தும் அடங்கும். இவை அனைத்தும் புசிப்பதற்கு ஹலாலானவையாகும். ஹதீஸ்களில் கோழி, குதிரை, உடும்பு, முயல், வெட்டுக் கிளி, பறவைகள் ஆகியவற்றை உண்பதற்கு ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன.

நபி (ஜல்) அவர்களின் ஸுன்னாவும் சில பிராணிகளின் மாமிசத்தைப் புசிப்பதை விலக்கியுள்ளது. நபி (ஸல்) அவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
மேலும் அவர் நல்லவைகளை அவர்களுக்கு ஹலாலாக்குவார். கெட்டவைகளை ஹராமாக்குவார். (அல்அஃராப்: 157)

இந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் கெட்டதும் தீங்கு பயக்கக்கூடியதும் அறுவருப்பதுமான பல பிராணிகளின் மாமிசத்தை உண்பதை விலக்கியுள்ளார்கள். அவற்றின் விபரத்தை கீழே காண்போம்:
நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவின் மூலம் உண்பதற்கு ஹராமாக்கப்பட்ட ஒரு பிராணி கழுதையாகும்.
அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கைபரைக் கைப்பற்றியபோது அவ்வூரில் இருந்த பல கழுதைகளை நாம் பிடித்தோம். அவற்றில் சிலதை அறுத்துக் கறி சமைத்தோம். அதைக் கண்ட நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வும் அவனது ரஸுலும் இதனைத் தடைசெய்கிறார்கள். இது ஷைத்தானின் அசுத்தமாகும்|. இதனையடுத்து சட்டிகள் அவை கொதித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே புரட்டிவிடப்பட்டன. (முஸ்லிம், நஸாயி, அபூதாவூத், இப்னு மாஜா, திர்மிதி)

கழுதையைப் போலவே கோவேறு கழுதையும் புசிப்பதற்கு சுன்னாவின் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: கைபருடைய தினத்திலே நபி (ஸல்) அவர்கள் கோவேறு கழுதைகளையும், கழுதைகளையும் (உண்பதை) எமக்குத் தடைசெய்தார்கள். நாம் குதிரை சாப்பிடுவதை அண்ணலார் தடைசெய்யவில்லை.

வீரப் பற்களால் இரையைப் பற்றி எடுக்கும் பிராணிகளும், நகத்தினால் பிராணிகளை வேட்டையாடக் கூடிய பறவைகளும் சுன்னாவின் மூலம் நாம் உண்பதற்கு ஹராமாக்கப்பட்டுள்ள இன்னுமொரு விலங்கின வகையாகும்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: வீரப்பல் உடைய ஐவாய் மிருகங்களையும், வீர நகமுள்ள பறவைகளையும் புசிப்பதை நபி (ஸல்) அவர்கள் விலக்கினார்கள்.

இங்கு வீரப்பற்களுள்ள, வேட்டையாடும் மிருகங்கள் என்பது ஓநாய், சிங்கம், நாய், புலி, பூனை முதலியவற்றைக் குறிக்கும்.
வீரநகமுள்ள பறவைகள் என்பது பிராணிகளை நகத்தினால் வேட்டையாடிச் சாப்பிடும் ராஜாளி, ஆந்தை, கழுகு, பருந்து முதலிய பறவைகளைக் குறிக்கும்.

நபி (ஸல்) அவர்களால் கொல்லக்கூடாது என்று தடைசெய்யப்பட்டுள்ள உயிரினங்களையும் புசிப்பது ஹராமாகும். தேனி, எறும்பு, செண்பகம், தவளை முதலானவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் கொல்லுமாறு ஏவிய காகம், தேள், எலி, நாய் முதலானவற்றையும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது.
இது வரை நோக்கிய அல்குர்ஆன், ஸுன்னா என்பவற்றிலிருந்தும் சட்ட நிபுணர்களின் ஆய்வுகளிலிருந்தும் உண்ணக் கூடாது என்று இஸ்லாம் விலக்கும் உணவு வகைகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:

1. செத்த மிருகங்கள்
2. இரத்தம்
3. பன்றி
4. அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை
5. கழுத்து நெருங்கிச் செத்தவை
6. அடிபட்டுச் செத்தவை
7. (மேலிருந்து அல்லது கீழே) விழுந்து செத்தவை
8. (மற்றொரு மிருகத்தின்) கொம்பால் குத்தப்பட்டுச் செத்தவை
9. ஐவாய் மிருகங்கள் கடித்துச் செத்தவை
10. நட்டுவைக்கப்பட்டவைகளுக்காக அறுக்கப்பட்டவை
11. நகத்தினால் பிராணிகளை வேட்டையாடக் கூடிய பறவைகள்
12. வீரப் (வேட்டைப்) பற்களால் இறைச்சியைப் பற்றியெடுக்கும் பிராணிகள்

செத்த மிருகங்கள்

புசிப்பதற்கு ஹராமாக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் அல்குர்ஆன் முதலாவதாக குறிப்பிடும் அம்சம் செத்த பிராணிகள் ஆகும். அல்குர்ஆனில் மட்டுமன்றி முன்னைய வேதங்களிலும் செத்த மிருகங்களின் மாமிசம் தடைசெய்யப்பட்டே இருந்தது.
செத்த பிராணிகள் நோயினாலோ, விஷம் உண்டமையினாலோ, விஷத்தினாலோ, கொள்ளை நோயினாN;லா அல்லது வயது முதிர்ச்சியின் காரணமாகவோ இறந்திருக்கக் கூடும். இவை அறுக்கப்படாமல் தாமே செத்து விடுவதனால் கெட்டுப்போன அவற்றின் இரத்தம் உடலுக்குள்ளேயே இருக்கும். எனவே இத்தகைய செத்த பிராணிகளின் மாமிசத்தை உண்பதனால் சுகாதாரக் கேடுகள் ஏற்பட வாய்ப்பேற்படுகிறது.

நோயினால் இறப்பவற்றின் உடலில் நச்சுப்பொருட்கள் காணப்படும். புளித்த உணவை நெருப்பில் வேக வைத்தாலும் அதிலுள்ள கிருமிகள் இறக்காமல் இருப்பது போல இறந்த உயிரினங்களின் இறைச்சியில் உள்ள கிருமிகளும் நெருப்பில் வேகவைத்த போதும் அப்படியே உயிரோடு இருக்கும். இத்தகைய உணவை உட்கொள்வதால் அதிகளவான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வயது முதிர்ச்சியின் காரணமாக இறக்கும் பிராணியைப் பொறுத்தவரையில், அதனுடைய கலங்கள் யாவும் படிப்படியாக இறந்து அனைத்துக் கலங்களும் செயல் இழந்த பின்னரே இறக்கின்றன. எனவே இதன் மாமிசத்தில் உயிரணுக்கள் இருக்க மாட்டா. இதனை உண்பதனால் உடலுக்கு தேவையான கலோரிகள் கிடைக்காது. மேலும் சமிபாடடைவதிலும் பிரச்சினைகள் தோன்றுகின்றன.
இதேபோன்று நோயினால் செத்த பிராணிகளின் இறைச்சியும் மனிதனுக்கு தீங்கு பயக்கக் கூடியதாகும். கிருமிகள் நிறைந்த இதனுடைய இறைச்சியை உண்பதன் மூலம் மரணம் கூட சம்பவிக்கலாம்.

மேலும் பிராணிகளில் செத்தவை அருவருக்கத்தக்கவையாகும். மனித இயல்பானது செத்த பிராணிகளின் மாமிசத்தை உண்ண விரும்பாது. இதனால்தான் முன்னைய வேதங்களிலும் கூட உணவாக உட்கொள்ள விரும்பும் மிருகத்தை அறுத்தல் வேண்டும் என்ற போதனை இடம் பெற்றிருப்பதை காணமுடிகிறது.

ஒரு முஸ்லிம் தனது காரியங்கள் அனைத்தையும் தான் நாடியே செய்தல் வேண்டும். நாட்டமும் முயற்சியும் செலுத்தப்படாமல் ஒன்றை அடையவோ ஒரு பயனை பெறவோ கூடாது. இது அறுத்தலின் பின்னால் உள்ள தத்துவம் ஆகும். அறுப்பதனால் ஒரு மிருகம், தானாக இறத்தல் என்ற நிலையில் இருந்து நீங்;கி விடுகிறது. மேலும் அறுப்பதனால் சாப்பிடுவதற்காக ஒரு மிருகத்தின் உயிர் போக்கப்படுகிறது என்ற நாட்டமும் எண்ணமும் பிறக்கிறது. ஒரு முஸ்லிம் தான் நாடாத நிலையில், சிந்திக்காத நிலையில் ஒன்றைப் புசிக்கக் கூடாது என்பது அறுத்தலின் தாத்பரியமாகும் என்று குறிப்பிடலாம். ஒரு மிருகம் அறுக்கப்பட்டால் அல்லது வேட்டையாடப் பட்டால் அங்கே நாட்டம், எண்ணம், முயற்சி என்பன இடம்பெறுகின்றன.

மிருகங்கள், பறவைகள் என்பன மனிதர்களைப் போலவே சமூகங்களாகும் என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. அவற்றுக்கும் உணவு தேவை. ஆகவே செத்த பிராணிகள் அவற்றுக்கு உணவாக ஆக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் மனிதர்கள் செத்த பிராணிகளைப் புசிப்பது மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இறந்த பிராணிகளைச் சாப்பிடுவது தடைசெய்யப்பட்டிருப்பதால் பிராணிகள் நோய்கள், பலவீனம் முதலானவற்றால் இறந்து விடாதவாறு அவற்றைப் பாதுகாக்க மனிதன் தூண்டப்படுகின்றான்.

ஹராமாக்கப்பட்ட செத்த பிராணிகளின் விபரத்தையும் அல்குர்ஆன் தந்துள்ளது. அதனைக் கீழே நோக்குவோம்:

1. இது செத்த பிராணிகளின் ஒரு வகையாகும். கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததை இது குறிக்கும். கழுத்தில் கயிறு, கொடி முதலானவை சுற்றி அதனால் கழுத்து நெருங்கி இறந்த பிராணியை இது குறிக்கும். பொந்து போன்றவற்றில் இறுகி இறந்ததும் இதில் அடங்கும்.

2. அடிபட்டுச் செத்ததை இது குறிக்கும். தடி போன்ற ஒன்றினால் தாக்கப்பட்டு இறந்தவையும் இப்பிரிவில் அடங்கும்.

3. விழுந்து இறந்த பிராணி என்பது இதன் பொருளாகும். மரம், மலை போன்ற ஓர் உயர்ந்த இடத்திலிருந்து விழுந்து இறந்த பிராணியும் கிணறு, பாதாளம் போன்றவற்றில் விழுந்து இறந்த பிராணியும் இவ்வகையைச் சார்ந்ததாகும்.

4. குத்தப்பட்டு செத்த பிராணியை இது குறிக்கிறது. மற்றொரு மிருகத்தின் கொம்பினால் குத்தப்பட்டு இறந்த பிராணி என்பது இதன் பொருளாகும்.

5. ஐவாய் மிருகங்கள் கடித்துச் செத்தவை என்பது இதன் கருத்தாகும். வேட்டைப்பல்லும் வீரநகமும் உள்ள மாமிசப் பிராணிகளான சிங்கம், புலி, சிறுத்தை, கரடி முதலியவைகளால் தாக்கப்பட்டு, குத்தப்பட்டு இறந்தவற்றை இது குறிக்கிறது.
இவை அல்குர்ஆன் (அல்மாயிதா : 03) குறிப்பிடும் செத்த பிராணிகளின் வகைகளாகும். இவற்றில் எதனையும் உணவாகக் கொள்வது ஹராமாகும்.

இஸ்லாம் ஜீவகாருண்யத்தை எவ்வளவு தூரம் வலியுறுத்துகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த சான்றாகும். அதாவது இஸ்லாம் மிருகங்களின் நலனில் அர்த்தமுள்ள விதத்தில் அக்கறை கொண்டுள்ளது. ஒரு மிருகம் கழுத்து நெரிக்கப்பட்டோ, விழுந்தோ, மற்றொரு மிருகத்தால் குத்தப்பட்டோ இறக்க இடமளிக்கக் கூடாது என்பதே இஸ்லாத்தின் போதனையாகும். அவ்வாறே மிருகங்களை தடி போன்றவற்றால் தாக்குவதும் வேதனை செய்வதும் கூடாது என்பதும் உணர்த்தப்படுகிறது. இந்தப் பின்னணியிலேயே மிருகங்களை மோதவிட்டு ரசிக்கும் விளையாட்டையும் இஸ்;லாம் தடைசெய்துள்ளது.

உயிரினங்கள் விடயத்தில் இஸ்லாம் எந்தளவு தூரம் கரிசனை கொண்டுள்ளது என்பதை இங்கு சற்று விளக்குவது பொருத்தமானதாகும்;.

உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் மனிதனது நலனுக்காகவும் அவனது உபயோகத்திற்காகவுமே படைக்கப்பட்டுள்ளன என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இவ்வகையில் உயிருள்ள கால்நடைகள் மாத்திரமன்றி நவீன விஞ்ஞானம் எடுத்துக் காட்டுவது போல உயிருள்ள தாவரங்களும்கூட மனிதனது உபயோகத்திற்கு அனுமதிக்கப்பட்டவையாகும்.

ஆயினும் இவற்றை கால்நடைகளாயினும் சரி, தாவரங்களாயினும் சரி அன்பின் அடிப்படையில் கையாள வேண்டும் என்பது இஸ்லாத்தின் கண்டிப்பான கட்டளையாகும். தேவையின்றி வீணாக எந்தவொரு ஜீவராசியையும் அழிப்பதை இஸ்லாம் பெரும் குற்றமாகக் கருதுகின்றது.
ஒரு பூனையைக் கட்டிவைத்து அதற்கு உணவு கொடுக்காமல், வெளியில் சென்று உணவு உட்கொள்ள சந்தர்ப்பமும் வழங்காமல் செய்த ஒரே காரணத்தினால் நரகம் நுழைந்த ஒரு பெண்ணைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஒரு நபிமொழி ஸஹீஹுல் புகாரியில் பதிவாகியுள்ளது. அதேவேளை தாகத்தினால் அவதியுற்ற நிலையிலிருந்த ஒரு நாய்க்காக மனமிரங்கி, அதற்கு நீர் புகட்டிய காரணத்தினால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஒரு விபசாரியைப் பற்றி அன்னார் குறிப்பிட்டமை ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

ஒருவர் தான் வளர்க்கும் கால்நடைகளைப் பராமரிப்பதற்கும் அவற்றுக்குத் தேவையான தீனியை வழங்குவதற்கும் நோய்வாய்ப்பட்டால் சிகிச்சையளிப்பதற்கும் கடமைப்பட்டுள்ளார். அவர் இக்கடமைகளை அவசியம் நிறைவேற்றல் வேண்டும் என ஷரீஅத் சட்டமும் இஸ்லாமிய ஒழுக்கவியலும் அவரைப் பணித்து நிற்கின்றன. ஒருவர் தனது பராமரிப்பில் உள்ள கால்நடைகளுக்குரிய கடமைகளை முறைப்படி நிறைவேற்றாத போது இஸ்லாமிய அரசு அதனை விற்றுவிடுமாறோ அல்லது சுதந்திரமாக செல்ல விட்டுவிடுமாறோ பணிக்கும்.
இவை தவிர மிருகங்களிடம் அவற்றின் சக்திக்கு மேல் வேலை வாங்குவதையும், சுமைகளை ஏற்றுவதையும் நபியவர்கள் தடுத்துள்ளார்கள். கால்நடைகளை முறையாக வளர்ப்பதற்கும் கூட நன்மை (அஜ்ர்) உண்டு என்பதை உணர்த்தும் ஒரு ஹதீஸ் புகாரியில் பதிவாகியுள்ளது.

இரத்தம்

உண்பதற்கு ஹராமாக்கப்பட்டுள்ள மற்றுமொரு பொருள் இரத்தமாகும். இங்கு இரத்தம் எனும்போது ஓடக் கூடிய இரத்தமே கருதப்படுகிறது. அல்குர்ஆனும் வடியக்கூடிய இரத்தம் என்ற பொருளில் கையாண்டுள்ளது.

ஒருமுறை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் கல்லீரல் பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள் அதனை நீங்கள் சாப்பிடலாம் என்றார்கள். அது இரத்தமல்லவா? என்று அன்னாரிடம் கேட்கப்பட்டபோது வடியக்கூடிய இரத்தம்தான் உங்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்தார்கள்.

ஜாஹிலிய்யாக் கால மக்கள் செத்த மிருகம், இரத்தம் ஆகிய இரண்டையும் சர்வசாதாரணமாகப் புசித்து வந்தார்கள். சிலவேளைகளில் உயிருள்ள மிருகத்தின் நரம்பைக் கீறி வெளியே எடுக்கப்படும் இரத்தத்தை, நெருப்பிலே வைத்துப் பதப்படுத்தி உண்பவர்களாக இருந்தனர். சிலபோது பதப்படுத்தப்படாமலேயே அதனைப் பருகும் வழக்கமும் அவர்களிடம் இருந்தது. இன்றும் இரத்தத்தை வேறு வடிவங்களிலும், பெயர்களிலும் உணவாக உட்கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. இஸ்லாம் இதனைத் தடை செய்கிறது.

நோயை உண்டுபண்ணும் கிருமிகள், பிறப்பெதிரிகள் என்பன இரத்தத்தில் கலந்திருக்கின்றன. எனவே இரத்தத்தை உணவாகக் கொள்வது மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். ஹலாலான எந்த விலங்கை அல்லது பறவையை அறுத்தாலும் அதனுடைய உதிரம் முழுவதையும் ஒழுகவிட்டு இறைச்சியை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இஸ்லாமிய அறுப்பு முறை இதனை முழுமையாக உத்தரவாதப்படுத்துகிறது.

எனவே இரத்தத்தை எந்த உருவிலும் பெயரிலும் உணவாகக் கொள்வது ஹராமாகும். ஆயினும் இரத்தத்துடன் தொடர்பான இரண்டு உணவு வகைகள் ஹலாலாக்கப்பட்டுள்ளன. இது பற்றிய நபிமொழி பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

எமக்கு இரண்டு செத்த பிராணிகளும், இரண்டு இரத்தங்களும் ஹலாலாக்கப்பட்டுள்ளன. அவையாவன: மீன், வெட்டுக்கிளிளூ கல்லீரல், மண்ணீரல் என்பவை ஆகும். (அஹ்மத், இப்னுமாஜா)

பன்றி

மிருக இனங்களிலேயே பன்றி மிகவும் அருவருப்பானதும் வெறுக்கத்தக்கதுமான ஒரு பிராணியாகும். அழுக்கையும் அசுத்தத்தையும் விரும்புவது இதன் இயல்பு. சோம்பலும் அளவு கடந்த சிற்றின்ப வேட்கையும் இதன் பிறவிக் குணங்கள். பன்றி சூரிய ஒளியை வெறுக்கின்றது. கோழைத்தனமும் பயமும் இதனுடன் ஒட்டிப் பிறந்த குணங்களாகும். அழுகிய மாமிசம், செத்த பிணங்கள், குப்பை கூளங்கள், மலசலம், பிற கழிவுப் பொருட்கள் என்பன பன்றி விரும்பி உண்ணும் உணவுகள்.

இஸ்லாத்தில் மட்டுமன்றி முன்னைய வேதங்களான தௌறாத், இன்ஜீல் ஆகியவற்றிலும் பன்றி இறைச்சி விலக்கப்பட்ட ஒரு பொருளாகவே இருந்து வந்துள்ளது.

புராதன சீன மருத்துவர்களில் பலரும் பன்றி இறைச்சியை உட்கொள்வதனால் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றிப் பேசியுள்ளனர்.
பன்றி இறைச்சி பழைய வியாதிகளை புதுப்பிக்கின்றதுளூ கீழ்வாதம், ஆஸ்த்மா ஆகிய வியாதிகளை உண்டாக்குகின்றுத என தாங் அரச குலத்தைச் சேர்ந்த பெரிய மருத்துவரான ஸன் ஸீ மாவோ தனது ஆரோக்கியப் பதிவேடு என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

மற்றுமொரு பண்டைய சீன மருத்துவரான லீசை ஷென் என்ற மிங் அரச குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவர் பன்றி இறைச்சி நச்சுத் தன்மை வாய்ந்த தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்றார்.
தற்கால ஒட்டுண்ணியல் விஞ்ஞானம் பன்றியில் காணப்படுகின்ற புரொட்டொஸோன் ஸிலியேட் (PசுழுவுழுணுழுயுN ஊஐடுஐயுவுநு) எனும் நாடாப் புழுவும், ட்ரிக்கீனா (வுசுஐஊர்ஐNயு) எனப்படும் வட்டப்புழுவும் மனிதனைத் தொற்றுவதால் அபாயகரமான நோய்கள் ஏற்படுகின்றன எனத் தெரிவிக்கின்றது.

மேற்கூறப்பட்ட பற்றீரியாக்களைத் தவிர, இன்னும் சில கிருமிகளையும் ஒட்டுண்ணிகளையும் மனிதர்களுக்கு தொற்றச் செய்யும் பிரதான காரணியாகவும் பன்றி காணப்படுகின்றது. அவற்றுள் சிலவற்றின் பெயர்களை இங்கு தருகின்றோம்:

1. நாடாப்புழு 2. வட்டப்புழு 3. கொழுக்கிப்புழு
4. பர(பு)கோனிமஸ் 5. பஸியோலொப்ஸிஸ்(டீ)பஸ்கி

இவற்றினால் ஏற்படும் பயங்கர நோய்கள் பற்றியும் நவீன மருத்துவம் விரிவாக விளக்குகின்றது. வேறு எந்த மிருகமும் மனிதனுக்கு இவ்வளவு பெருந்தொகையான நோய்களைப் பரப்புவதில்லை.

பன்றி இறைச்சி சாப்பிடுவது மனிதனின் ஒழுக்க நிலையிலும் பாதிப்பு ஏற்படுத்தக் காரணமாக அமைகின்றது எனக் கூறப்படுகின்றது. இவ்வாறு படைப்பினங்களின் இரகசியங்களை அறிந்த வல்ல நாயன் அல்லாஹ் தனது அடியார்கள் மீது கொண்ட கருணையினால் அவர்களுக்கு தீங்காக அமைபவற்றை ஹராமாக்கி தடை செய்துள்ளான்.

அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர்கூறி அறுக்கப்பட்டவை:

உண்பதற்கு விலக்கப்பட்டுள்ள மற்றுமொரு வகை அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டவை ஆகும். அதாவது அல்லாஹ் அல்லாத ஏனையவர்கள், ஏனையவைகளின் பெயரில் அறுக்கப்பட்டவற்றை இது குறிக்கிறது. இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் இதுபற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

இவ்வாறு அறுக்கப்பட்ட பிராணி உண்பதற்கு ஹலாலாக மாட்டாது. அறுத்தவர் முஸ்லிமாகவோ முஸ்லிம் அல்லாதவராகவோ இருப்பினும் சரியே. இவ்வாறு அறுக்கப்படும் போது எவருக்காக அறுக்கப்படுகிறதோ அவரை, மகத்துவப்படுத்துவதையும் நாடினால் அது குப்ர் ஆக அமையும். இவ்வாறு அறுப்பவர் முஸ்லிமாக இருந்தால் முர்தத் ஆக மாறிவிடுவார்.

ஏனெனில் இவ்வாறு அறுப்பது அல்லாஹ் அல்லாதவருக்காக செய்யும் வணக்கமாகும். வணக்கம் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியதாகும். இந்த வகையில் தௌஹீதைக் காப்பதும் ஷிர்க் விளைவதைத் தவிர்ப்பதுமே அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணிகளைச் சாப்பிடுவதை தடைசெய்தமைக்கான காரணங்களாகும்.

அல்லாஹ் மனிதனைப் படைத்து பூமியில் அனைத்தையும் அவனுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான். பிராணிகளையும் அவனே மனிதனின் ஆளுகைக்கு உட்படுத்தி அவனது நலனுக்காகவும் நன்மைக்காகவும் அதன் உயிரைப் போக்கவும் அனுமதித்துள்ளான்.

இந்த வகையில் ஒரு பிராணியை அறுக்கும்போது அவன் இறைவனின் திருநாமத்தை குறிப்பிடுவதானது இந்த உயிரைப் படைத்து அதை தனக்கு வசப்படுத்தித் தந்துள்ள இறைவனின் அனுமதியுடனும், அவனது திருப்தியுடனும் அறுப்பதை பிரகடனப்படுத்துவதாகும். மாற்றமாக அல்லாஹ் அல்லாதாரின் பெயர் கூறப்படுவது இந்த அனுமதியை செல்லுபடியற்றதாக்குவதாகும். இதனால் அதன் மாமிசத்தைப் புசிக்கும் வாய்ப்பை அவன் இழக்கிறான்.

எனவே அறுத்தல் என்பது ஒரு சன்மார்க்கக் கிரியை - வணக்கம் ஆகும். வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். அல்லாஹ் இப்படிச் சொல்லுமாறு எம்மைப் பணிக்கிறான்:

நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய நுஸுக்கும் எனது வாழ்வும் எனது மரணமும் ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கு உரியதாகும். (அல்அன்ஆம்: 161)

ஸூறதுல் ஹஜ்ஜுடைய 37ம் வசனமும் எமது சிந்தனைக்குரியதாகும். அது பின்வருமாறு கூறுகிறது:

(உங்களது குர்பானியின்) மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வைப் போய் சேரப் போவதில்லை. மாறாக உங்களது தக்வாதான் அவனை அடையும்.
இங்கு தக்வா என்பது இறைவனுக்காக என்று அவன் மீது கொண்ட பக்தியினால் செயற்படுவதைக் குறிக்கும்.

நட்டுவைக்கப்பட்டவைகளுக்காக அறுக்கப்பட்டவை:

நட்டுவைக்கப்பட்டவைகளுக்காக அறுக்கப்பட்டவையும் புசிப்பதற்கு தடை செய்யப்பட்டவை ஆகும். இவை அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறி அறுக்கப்பட்டவற்றுடன் தொடர்புடையவை ஆகும். இங்கு நட்டு வைக்கப்பட்டவை என்பது விக்கிரகங்களைக் குறிக்கும்.

ஜாஹிலிய்யாக் கால மக்கள் கஃபாவைச் சுற்றி நட்டப்பட்டிருந்த சிலைகளுக்கு உயிர்ப்பலியிடும் வழக்கத்தை கொண்டவர்களாக இருந்தனர். இத்தகைய பிராணிகளின் மாமிசத்தை உண்பதும் ஹராம் ஆகும் என்பதையே இது உணர்த்துகிறது.

ஷரீஅத் கூறும் அறுப்பு முறை:

உண்பதற்கு ஹலாலாக்கப்பட்டுள்ள பிராணிகள் ஷரீஅத் வரையறைகளைப் பேணி அறுக்கப்படுவதும் மிக முக்கியமானதாகும். இல்லாதபோது அவையும் ஹராமாகிவிடும்.

புசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள தரைவாழ் மிருகங்கள் இருவகைப்படும். ஒன்று, எமது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை. ஆடு, மாடு, கோழி, வாத்து, தாரா முதலான வீட்டு மிருகங்களையும், பறவைகளையும் இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

இரண்டு, எமது கட்டுப்பாட்டில் இல்லாத காட்டில் வாழும் மிருகங்கள்.
முதல் வகையைச் சேர்ந்த பிராணிகள் - அதாவது வீட்டு மிருகங்கள் உண்பதற்கு ஹலாலானவையாக அமைய அவை முறையாக அறுக்கப்படல் வேண்டும். அறுத்தல் செல்லுபடியாவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

அவை பின்வருமாறு:
1. அறுப்பவர் புத்திசுவாதீனம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

2. முஸ்லிமாக இருத்தல் வேண்டும். வேதத்தை உடையவர்கள் அறுத்த பிராணிகளை உட்கொள்வது தொடர்பாக விரிவான ஆய்வுகள் காணப்படுகின்றன.

3. அறுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவி இரத்தத்தை ஓட்டக் கூடியளவு கூர்மையானதாக இருத்தல் வேண்டும்.

4. குரல்வளையும், உணவுக்குழாயும் அறுக்கப்படல் வேண்டும்.

5. அறுத்தலின் போது அல்லாஹ் அல்லாதாரின் பெயர் சொல்லப்படல் ஆகாது.

6. அறுக்கும்போது அல்லாஹ்வின் நாமம் கூறப்படல் வேண்டும். இதற்கு பின்வரும் ஆதாரங்களைக் குறிப்பிடலாம்:
நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் வசனங்களை ஈமான் கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டவற்றையே புசியுங்கள். (அல்அன்ஆம்: 119)

அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும்.(அல்அன்ஆம்: 122)

நபிமொழி ஒன்று இவ்வாறு கூறுகிறது: 'இரத்தம் ஓட்டப்பட்டு அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டுள்ளதை நீங்கள் சாப்பிடுங்கள்.

அறுப்பு செல்லுபடியாவதற்கான இந்த நிபந்தனைகளின் பின்னால் பல தத்துவங்கள் இருக்கின்றன. அறுக்கப்படும் பிராணியின் வேதனையை உச்சநிலையில் குறைத்து அதன் உயிரை மிகக் குறைந்த நேரத்தில் போக்கி அதற்கு சுகத்தைக் கொடுப்பதை இந்த நிபந்தனைகள் உத்தரவாதப் படுத்துகின்றன.

கூர்மையான ஆயுதத்தால் அறுக்க வேண்டும். பல், நகம் போன்றவற்றையோ கூர்மையில்லாத ஆயுதங்களையோ அறுப்பதற்குப் பயன்படுத்தலாகாது. ஏனெனில் அதனால் பிராணி வேதனை அடையும்.
அல்லாஹ் அனைத்துடனும் திறம்பட நடந்து கொள்வதை கடமையாக்கியுள்ளான். எனவே, நீங்கள் கொன்றால் கொல்வதை முறையாகச் செய்யுங்கள்ளூ அறுத்தால் அறுப்பை முறையாக அமைத்துக் கொள்ளுங்கள்ளூ (அறுப்பவர்) ஆயுதத்தை கூர்மையாக தீட்டிக் கொள்ளட்டும்ளூ அதன் மூலம் அறுக்கும் பிராணிக்கு சுகத்தைக் கொடுக்கட்டும். (முஸ்லிம்)

அறுப்பதற்கு உபயோகிக்கும் உபகரணத்தை தீட்டும்போது அறுக்கப்படவுள்ள மிருகத்திற்கு தெரியாதவாறு மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் நபி போதனையாகும்.

ஒருவர் ஓர் ஆட்டை அறுப்பதற்காக கிடத்திய நிலையில் ஆயுதத்தை தீட்டிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதனை விளித்து, 'அந்த ஆட்டை பலமுறை கொல்லப் பார்க்கின்றீரா? அதனை அறுப்பதற்காகக் கிடத்த முன்னரே உமது ஆயுதத்தைத் தீட்டிக் கொள்ளக் கூடாதா? என்றார்கள். (ஹாகிம்)

உமர் (ரழி) அவர்கள் ஒருமுறை, ஓர் ஆட்டை அறுப்பதற்காக அதன் காலைப் பிடித்து இழுத்துச் செல்லும் ஒருவரைக் கண்டு பின்வருமாறு கண்டித்தார்கள்: உமக்கு என்ன பிடித்து விட்டது? அதனை மரணத்தின்பால் அழகான முறையில் இட்டுச் செல்வீராக(முஸன்னப் அப்திர்ரஸ்ஸாக்)

ஜாஹிலிய்யாக்கால மக்கள், பிராணிகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் சில உறுப்புக்களை அறுத்துச் சாப்பிடும் பழக்கம் உடையோராக இருந்தார்கள். இது பிராணிக்கு எத்தகைய வேதனையைக் கொடுக்கும் என்பதை உணர்ந்த நபியவர்கள், உயிருடன் இருக்கும் ஒரு பிராணியிலிருந்து அறுக்கப்பட்டது இறந்ததாகவே கருதப்படும். (அஹ்மத், அபூதாவுத்) எனக் கூறி அத்தகைய உறுப்புக்களை உண்பதை தடை செய்தார்கள்.

மதுபானம்:

உட்கொள்வதற்கு ஹராமாக்கப்பட்டுள்ள மற்றுமொன்று மதுபானமாகும்.
ஜாஹிலிய்யாக்கால மக்கள் மதுபானப் பிரியர்களாக இருந்தனர். இஸ்லாம் மதுபானத்தை கட்டம் கட்டமாக, படிப்படியாக தடைசெய்து இறுதியில் மதுப் பழக்கத்தை முற்றாக ஒழித்தது. ஆரம்பத்தில் மதுபானத்தில் உள்ள நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்று அல்குர்ஆன் கூறியதுளூ அடுத்த கட்டமாக போதையுள்ள நிலையில் தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தது. மூன்றாம் கட்டமாக ஸூரா அல்மாயிதாவின் 90, 91ஆம் வசனங்கள் இறங்கின:

விசுவாசிகளே! மதுபானமும் சூதாட்டமும் விக்ரக வணக்கமும் அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளிலுள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மதுபானத்தின் மூலமும் சூதாட்டத்தின் மூலமும் உங்களுக்கிடையில் விரோதத்தையும் குரோதத்தையும் உருவாக்கவும் அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே இவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா?

அல்லாஹுதஆலா இந்த இரு வசனங்களிலும் மதுபானத்தையும் சூதாட்டத்தையும் ஷிர்க்குடன் இணைத்துக் குறிப்பிட்டுள்ளான். அருவருக்கத்தக்க செயல்கள் என்றும் வர்ணிக்கின்றான். மதுவையும், சூதையும் தவிர்ப்பதை வெற்றிக்கான வழி என்றும் கூறுகின்றான். மேலும் இவை இரண்டின் மூலமாகவும் ஏற்படும் சமூக ரீதியான தீங்குகளான உறவுகள் முறிக்கப்படுவதையும், பகைமையும் வெறுப்பும் தோன்றுவதையும் குறிப்பிட்டுள்ளான்.

மேலும் திக்ர், தொழுகை முதலான ஆன்மீக சன்மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இவை இரண்டும் அமைகின்றன எனக் கூறி இவற்றினால் விளையும் ஆன்மீகக் கேடுகளையும் அல்லாஹ் விளக்குகின்றான்.

இந்த அல்குர்ஆன் வசனங்களை நபித் தோழர்கள், இறைவிசுவாசிகள் எதிர்கொண்ட விதம் அற்புதமானது. அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை செவிமடுத்தவுடன் மதுக் கிண்ணங்களை கையில் வைத்துக் கொண்டிருந்தோர் அப்படியே அவைகளை தரையில் தூக்கி எறிந்தார்கள்ளூ வீதிகளில் இருந்த மதுபானப் பீப்பாக்களை உடன் கொட்டி வீதிகளில் ஓடவிட்டார்கள்.

மதுபானம் அருந்தினால் விளையும் தீங்குகளைக் கவனத்திற் கொண்டு பல நாடுகள் பெருந் தொகையான செலவுகளைச் செய்து மதுப்பழக்கத்தை ஒழிக்க கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கத் தவறியமையை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.

இஸ்லாம் மதுபானத்தை ஹராமாக்கியுள்ளமைக்கான காரணம் அது போதையை ஏற்படுத்துகின்றது என்பதாகும். எனவே, ஒரு பானம் எந்தப் பொருளில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் சேர்மானங்கள் எதுவாக இருந்தாலும் அது போதையை ஏற்படுத்தும் என்றிருந்தால் அது ஹராமாகக் கொள்ளப்படும்.

ஒரு முறை நபியவர்களிடம் தேன் அல்லது பார்லி அல்லது கோதுமை முதலானவற்றில் தயாரிக்கப்படும் ஒருவகை மதுபானம் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள், சொற்சுருக்கத்துடனும் பொருட்செறிவுடனும் பின்வருமாறு கூறினார்கள்:

போதையை ஏற்படுத்தும் அனைத்தும் கம்ர் எனும் மதுபானமாகும். அனைத்து கம்ரும் ஹராமாகும்.(முஸ்லிம்)

மேலும் அதிக போதை ஏற்படுத்தக்கூடிய மதுபானங்கள் மட்டுமன்றி குறைவாகப் போதையைக் கொடுப்பவையும் ஹராமானவையாகும். இது பற்றி நபிமொழி ஒன்று பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

அதிக போதை ஏற்படுத்தக் கூடியதை குறைவாக உட்கொள்வதும் ஹராமாகும்.(அஹ்மத்,அபூதாவுத்,திர்மிதி)

இந்த வகையில் மதுபானம் போன்றவற்றில் ஓரிரு மிடர்கள் அருந்துவதும் ஹராமானதாகவே கொள்ளப்படும்.
மதுபானம் அருந்துவது மட்டுமன்றி அதை விற்பனை செய்வதும் ஹராமானதாகும். ஒரு முஸ்லிம் மதுபானம் வடிக்கவோ, விற்கவோ, விற்கும் இடத்தில் வேலை செய்யவோ முடியாது. மதுபானம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள், அதனை வடிப்பவர், விற்பவர், வாங்குபவர், குடிப்பவர், சுமப்பவர் உட்பட மதுபானம் பரிமாறப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்புச் செய்யும் பத்துப் பேரை சபித்தார்கள். இது தொடர்பான ஹதீஸ், ஸுனனுத் திர்மிதி, ஸுனன் இப்னுமாஜா ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

இது மட்டுமன்றி 'ஹராத்துக்கு வழி சமைக்கும் வழிகளை அடைத்தல் என்ற இஸ்லாத்தின் சட்ட விதியின் அடிப்படையில் திராட்சைப் பழம் விற்பனை செய்வது ஹலாலாயினும் அதனை மதுபானம் தயாரிப்பதற்காக வாங்குபவருக்கு விற்பனை செய்வது ஹராமானதாகும்.

சிலர் டீநுநுசு அருந்துவது பிழையானதல்ல என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். பியர் பானம் மதுபான வகையில் அடங்குமா, இல்லையா என்பதில் வேறுபட்ட கருத்து இருப்பினும் சர்வதேச போதை வஸ்து எதிர்ப்பு அமைப்பானது பியரையும் தடை செய்யப்பட்ட மதுபானங்களின் பட்டியலில் அடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு குடிவகை சமூகத்தில் மதுபானமாகக் கருதப்படுவதில்லை என்பதை வைத்து அதற்கு அங்கீகாரம் வழங்க முடியாது.

இதனையிட்டு நபி (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு எச்சரித்துள்ளார்கள். எனது சமூகத்தில் சிலர் மதுபானம் அருந்துவர்.ஆனால், அதனை அவர்கள் வேறு பெயர் கொண்டு அழைப்பவர்களாக இருப்பர்.(நஸாஈ)

பியர் போன்ற பானங்களை நாடவேண்டிய தேவை இல்லாத அளவுக்கு மார்க்கம் அனுமதித்துள்ள மென்பான வகைகள் (ளுழகவ னுசiமௌ) இன்று தாராளமாகக் கிடைக்கின்றன. ஹராமானவற்றை நாடவேண்டிய தேவை இல்லாத அளவுக்கு அவற்றை ஈடுசெய்யும் விதத்தில் அவற்றுக்கு பிரதியீடாக பலவற்றை ஆகுமானதாக அல்லாஹ் ஆக்கித் தந்துள்ளமை அவனின் தனிப் பெரும் அருளாகும்.

நோய்களுக்கு மருந்தாக மதுபானத்தை பாவிக்க முடியுமா என்ற கேள்வி சிலபோது எழுப்பப்படுவதுண்டு. அடிப்படையில் மதுபானத்தை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஒருமுறை ஒருவர் தான் மருந்துக்காக மதுபானம் தயாரிப்பதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது மருந்தல்ல. உண்மையில் அது நோயாகும் என்றார்கள். (முஸ்லிம்)

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
அல்லாஹ் நோயையும் அதற்கான மருந்தையும் இறக்கியுள்ளான். எனவே, மருந்து உபயோகிப்பீர்களாக. ஹராமானதைக் கொண்டு சிகிச்சை பெறாதிருப்பீர்களாக. (அபூதாவூத்)

போதைப் பொருட்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:
அல்லாஹ் உங்களுக்கு அவன் ஹராமாக்கியவற்றில் (நோய்களுக்கான) நிவாரணத்தை அமைத்து வைக்கவில்லை. (புகாரி)

மதுபானம் ஹராமானதாக இருக்க அதனை மருந்தாகப் பயன்படுத்த அனுமதிப்பது அதில் ஆசையூட்டுவதாக அமையும். அது ஷரீஅத்தின் நோக்கத்திற்கு முரணானதாகும். ஷரீஅத் ஒன்றைத் தடைசெய்தால் அதனை எல்லா வகையிலும் தவிர்க்க வேண்டும். எல்லா வழிகளிலும் அதனை விட்டும் தூரமாக வேண்டும்.

மதுபானத்தை அல்லது போதைவஸ்துக்களை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று கூறி அனுமதித்தால் மனிதர்கள் அவற்றில் நன்மைகள் இருக்கின்றனவே என்று நியாயம் கண்டு நோயில்லாத சாதாரண நிலைகளிலும் அவற்றைப் பயன்படுத்துவார்கள்.

ஆயினும் நிர்ப்பந்தங்களுக்கு ஷரீஅத்தில் விதிவிலக்குகள் உண்டு. இந்த வகையில் ஒரு போதைப் பொருளையோ அல்லது அது கலந்த ஒன்றையோ மருந்தாக எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தால் உயிர் ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் அதனை வரம்பு மீறாமலும் அளவு கடக்காமலும் பயன்படுத்த அனுமதி உண்டு.

எவர் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவர் அளவு மீறாமலும் வரம்பு மீறாமலும் (இவைகளைப் புசித்து விட்டால் அது குற்றமாகாது.) நிச்சயமாக உமது இறைவன் மிக மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கின்றான்.(அல்அன்ஆம்: 146)

மதுபானத்தைப் போலவே கஞ்சா, அபின், ஹெரோய்ன் போன்ற போதைவஸ்துக்களும் ஹராமானவையாகும். உண்மையில் மதுபானத்தை விடவும் இவை பாரதூரமான குற்றமாகக் கொள்ளப்படுகின்றன.

மதுபானம் அருந்தியவருக்கு இஸ்லாமிய சட்டத்தின் படி (ஹத்) தண்டனை நிறைவேற்றப்படும். 40 அல்லது 50 கசையடிகள் மதுபானம் அருந்தியவருக்கு வழங்கப்படும். ஹெரோயின் போன்ற மிக ஆபத்தான போதைப் பொருட்களை கடத்துபவர்கள், வியாபாரம் செய்பவர்கள் ஆகியோருக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்பது நவீன கால இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் சன்மார்க்கத் தீர்ப்பாகும்.

மதுபானம், போதைவஸ்துக்களோடு சேர்த்து புகைப்பிடித்தல் பற்றிய ஷரீஅத் நிலைப்பாட்டையும் நாம் நோக்குவது அவசியமாகும்.
இன்று பாவனையில் இருக்கும் சிகரெட், சுருட்டு, பீடி போன்றவை ஆரம்ப காலத்தில் பரவலாக இல்லாமல் இருந்த காரணத்தினாலும் இவற்றுக்குப் பயன்படுத்தப்படும் புகையிலை முதலானவற்றினால் விளையும் சுகாதாரக்கேடுகள் பற்றி அன்று அறியப்படாமல் இருந்த காரணத்தினாலும் புகைத்தல் பற்றிய தெளிவான மார்க்கத் தீர்ப்பை ஆரம்பகால இமாம்கள் வழங்கவில்லை.

அண்மைக்காலம் வரை புகையிலையின் தன்மை, புகைத்தலால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அறிவுபூர்வமான, விஞ்ஞான ரீதியிலான தெளிவான முடிவுகள் பெறப்படாததனால் புகைப்பிடித்தல் பற்றிய தீர்ப்பிலும் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவி இருக்கின்றன.

சிலர் புகைத்தல் மக்ரூஹ் என்றார்கள். வேறு சிலர் முபாஹ் (பிழையானதல்ல) அது ஆகுமானது என்றார்கள். மற்றும் சிலர் ஹராம் என்று தீர்ப்பு வழங்கினார்கள். தற்காலத்தில் பெரும்பாலான புகஹாக்கள் புகைத்தலை ஹராம் என்றே கருதுகிறார்கள். புகைத்தல் ஹராமானது என்பதற்கு நியாயமான பல காரணங்களைக் காணமுடிகிறது. அவற்றைச் சுருக்கமாக கீழே நோக்குவோம்:

1. போதையை ஏற்படுத்துதல்:

புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆரம்ப பழக்கமுடையோருக்குச் சிறிது கூடுதலாகவே போதை ஏற்படுகிறது. ஏனைய போதைவஸ்துக்களைப் பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்குப் போதை ஏற்படாத போதும், மிகக் குறைந்த அளவிலாவது புகைப்பவர்கள் போதை கொள்கிறார்கள். 'குறைந்தளவு போதையை ஏற்படுத்தக்கூடியதும் ஹராமானது என்பது நபிமொழி.

2. சோர்வை ஏற்படுத்துதல்:

புகைப்பதனால் போதை ஏற்படுவதில்லை என்று வாதிப்போரும் புகைத்தல் சோர்வை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதில்லை. நபியவர்கள் உடல் உறுப்புக்களில் சோர்வை ஏற்படுத்தக் கூடியவற்றையும் தடுத்துள்ளார்கள். இது பற்றிய ஹதீஸ் முஸ்னத் அஹ்மத், அபூதாவூத் முதலான கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
இவற்றுடன் புகைப்பதனால் மூன்று வகையான தீமைகள் விளைகின்றன:

உடல்நலனுக்கு ஏற்படும் கேடு:

புகைப்பதனால் உடல்நலனுக்கு ஏற்படும் பயங்கரமான பாதிப்புக்களைப் பற்றியும் சுகாதாரக் கேடுகளைப் பற்றியும் நவீன மருத்துவம் மிக விரிவாகப் பேசுகிறது. ஒரு காலத்தில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி உறுதியான, முடிவான அறிவியல் ரீதியான ஆய்வுகள், முடிவுகள் இருக்கவில்லை என்பதனால் இது பற்றிய நிலைப்பாடுகளும் வேறுபட்டன.

ஆனால் இன்று இதன் கேடுகள் குறித்து எத்தகைய சந்தேகத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு இது பற்றிய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. வருடாந்தம் புகைத்தல் தொடர்பான நோய்களினால் 2.5 மில்லியன் மக்கள் வயதாவதற்கு முன்னதாகவே இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிக்கிறார். அதாவது ஒவ்வொரு 13 வினாடிகளுக்கும் ஒரு மரணம் இதன் மூலம் சம்பவிக்கிறது.

மற்றுமோர் ஆய்வின்படி புகைப்பதனால் தினமும் 300 பேர் கொல்லப்படுகிறார்கள். இன்னுமோர் ஆய்வின்படி தினமும் இரண்டு சிகரெட்டுக்கு மேல் புகை பிடிப்பவர்களில் நான்கில் ஒருவர் வயதாவதற்கு முன்பே இறக்கிறார்.

புகைத்தலால் பல்வேறுபட்ட நோய்கள் உருவாகின்றன. புகைப்பிடிப்பதனால் ஏற்படும் நோய்களில் புற்றுநோய் குறிப்பிடத்தக்கதாகும். பலவிதமான புற்றுநோய்கள் இருக்கின்றன. பிற புற்றுநோய்களைக் காட்டிலும் நுரையீரல் புற்றுநோயால் அதிகமான மக்கள் மரணமடைகிறார்கள். 90மூ க்கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய், புகைப்பிடிப்பதனால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த நோய் தொற்றிக் கொள்ளும் அபாயம், புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களுக்கு 15 மடங்கு அதிகமாகவுள்ளது.

தொண்டை அல்லது வாய்ப்புற்று நோய் அபாயத்தை புகைப்பிடித்தல் தோற்றுவிக்கிறது. மேலும் புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் உணவுக்குழல், இரைப்பைப் புற்றுநோயினால் இறக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஆகியவற்றாலும் தாக்கப்படும் ஆபத்தும் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.

சிகரெட்டில் நிகோடின் அடங்கலான 4000 கேடு விளைவிக்கும் இரசாயனப் பொருட்கள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது. புகைப்பிடித்தல் இதய நோய்களுக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. புகைக்கப்படும் சிகரெட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் தீவிரமடைகிறது.
புற்றுநோய்கள், இருதய நோய்கள் மட்டுமன்றி புகைப்பிடிப்பதால் அபாயகரமான சுவாசக் கோளாறுகளும் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மார்புச்சளி, ஆஸ்துமா, எம்பீஸிமா (நுஅphலளநஅய) உட்பட மற்றும் பல சுவாசக் கோளாறு நோய்களை புகைத்தல் தீவிரப்படுத்துகிறது என்பதற்கு போதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன.

புகைப்பிடித்தல் இனப்பெருக்க சுகாதாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் என்பதும் மருத்துவம் கூறும் மற்றுமோர் உண்மையாகும். சொத்தைப்பல், பல்விழுதல், ஈறு வீக்கம், வாயில் துர்நாற்றம் முதலான பல நோய்களுக்கும் புகைத்தல் காரணமாக அமைகிறது. மேலும் புகைத்தல் நுகர்திறனைக் குறைக்கின்றதுளூ உபயோகிக்கும் மருந்துகளின் பயன்தரும் திறனைக் குறைக்கிறதுளூ குடற்புண் நோய்களை தீவிரப்படுத்துகிறது.

இவ்விளக்கங்களிலிருந்து புகைப்பிடித்தல் உடல் நலனை எவ்வாறு கடுமையாகப் பாதிக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். இவ்வாறு மனிதனின் சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியன இஸ்லாமிய நோக்கில் ஹராமானவையாகவே கொள்ளப்படுகின்றன. அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையோனாக இருக்கின்றான். (அந்நிஸா: 29)

மேலும் உங்களை நீங்களே அழிவுக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள். (அல்பகரா:195)

மனிதனுக்கு கேடுவிளைவிக்கும் அனைத்தையும் நபிகளார் தடுத்துள்ளார்கள் என்பதற்கு பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. இஸ்லாமிய ஷரீஆ, சட்டங்களை வகுக்கும்போது கவனத்திற் கொள்ளும் அடிப்படையான விதி, நலன்கள் - நன்மைகள் விளைதல் வேண்டும். தீங்குகள், கேடுகள் தவிர்க்கப்படல் அல்லது தடுக்கப்படல் வேண்டும் என்பதாகும்.

பொருள் நஷ்டம்:

புகை பிடிப்பதனால் பணம் விரயமாகிறது. உடலுக்கோ, ஆன்மாவுக்கோ எத்தகைய பயனுமளிக்காத ஒன்றிற்காக பணம் விரயமாக்கப்படுகிறது. வீண்விரயம் செய்வதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள். அல்குர்னும் இதனைக் கண்டிக்கிறது.

வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் மிதமிஞ்சிச் செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்கள்.
வீண்விரயம் பற்றி இமாம் இப்னு ஹஸ்ம் பின்வருமாறு கூறுகின்றார்:
வீண்விரயம் செய்வது ஹராமாகும். வீண்விரயம் மூன்று வகைப்படும்:

01. அல்லாஹ் விலக்கியவற்றில் செலவு செய்வது. அது ஒரு கொசுவின் இறக்கையளவு அற்பமாக இருப்பினும் சரியே.

02. அவசியம் தேவையற்ற ஒன்றில் செலவுசெய்தல். இந்தச் செலவினால் குறித்த நபரின் செல்வநிலையில் பாதிப்பு ஏற்படுமாயின் அதுவும் வீண்விரயமாகும்.

03. செல்வத்தை வீணாக வீசியெறிதல். இது குறைந்தளவுடையதாக இருப்பினும் சரியே...

ஆன்மாவுக்கு ஏற்படும் தீங்கு

புகைத்தலுக்கு பழக்கப்பட்டவர்கள் தமது மனோவலிமையை இழந்து இத்தீய பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். ஏதோ காரணத்தால் புகைப்பிடிக்கின்ற சந்தர்ப்பத்தை இழக்கின்ற வேளையில் இத்தகையோரின் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் கேவலமானதாகவும் கீழ்த்தரமானதாகவும் அமைகின்றன என்பதை அவதானிக்க முடியும்.

எனவே சுகாதாரக் கண்ணோட்டத்தில் நோக்கினாலும், பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ஆன்மிகக் கண்ணோட்டத்தில் அணுகினாலும் புகைப்பிடித்தல் ஹராமானது என்ற கருத்தே மிகைத்து பலமானதாக விளங்குகிறது.

இதுவரை நோக்கிய இவ்வாய்வுக்கூடாக உணவு தொடர்பான இஸ்லாமிய வரையறைகள் எவ்வளவு தூரம் அர்த்தமுள்ளவை என்பதையும், உணவின் சுத்தம், போசாக்கு, தரக்கட்டுப்பாடு ஆகியவற்றை பேணுவதற்கு இவ்வரையறைகள் துணைபுரியும் பாங்கினையும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

உண்ணல், பருகல் தொடர்பான இஸ்லாமிய ஒழுங்குமுறைகள்:

உண்ணல், பருகல் தொடர்பாக முஸ்லிம்கள் கடைபிடிக்க வேண்டிய சில ஒழுக்கங்கள் உண்டு. அவற்றின் சுருக்கம் பின்வருமாறு:

. பிஸ்மில்லாஹ் என்று கூறி உண்ண ஆரம்பித்தல்:

நபி (ஸல்) அவர்கள் சொன்னதை தான் கேட்டதாக ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவர் தனது வீட்டினுள் செல்லும்போதும், உணவு அருந்தும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஷைத்தான் (அடுத்த ஷைத்தான்களை விளித்து), உங்களுக்கு இரவு தூங்குவதற்கு இடமோ, உண்ணுவதற்கு உணவோ (இன்று) இல்லை| எனக் கூறுவான். அந்த மனிதன் வீட்டினுள் நுழையும்போது அல்லாஹ்வை நினைவு கூறவில்லையாயின் ஷைத்தான், ஷஉங்களுக்கு இரவு தூங்குவதற்கு இடம் கிடைத்து விட்டது என்பான். உணவருந்தும் போதும் அந்த மனிதன் அல்லாஹ்வை நினைவுபடுத்தவில்லையெனில் ஷைத்தான் உங்களுக்கு இரவு தூங்க இடமும், இரவுச் சாப்பாடும் (இரண்டும்) கிடைத்து விட்டன என்பான்.

உங்களில் ஒருவர் உணவு உண்டால் பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் அவ்வாறு கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆஹிரஹு என்று சொல்லட்டும்.

. வலது கையால் சாப்பிடல்:

இப்னு உமர் (ரழி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் தனது இடது கையால் சாப்பிடலாகாது இடது கையால் குடிக்கவும் கூடாது. உண்மையில் ஷைத்தான் இடதால் சாப்பிடுகிறான்; இடதால் குடிக்கிறான்.

. உணவு தட்டின் நடுவிலிருந்து சாப்பிடுவதும் அங்கும் இங்குமாகச் சாப்பிடுவதும் நபிவழிக்கு முரணான செயல்களாகும்:

அபூ ஸல்மா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சிறுவனாக இருந்தபோது ஒருமுறை நபியவர்களின் மடியில் அமர்ந்திருந்தேன். எனது கை உணவுத்தட்டில் அங்குமிங்குமாகச் சென்றது. இதை அவதானித்த அன்னார், சிறுவனே! பிஸ்மில் சொல். வலது கையால் சாப்பிடு. உனக்கு அருகே இருக்கும் உணவைச் சாப்பிடு என்றார்கள்.

. சாப்பிட்டு முடித்து கைகளை அலம்பிக் கொள்ள முன்பதாக விரல்களை வாயிலிட்டு நன்றாக உறிஞ்சுவதும் சாப்பாட்டுத் தட்டை விரலால் வழித்து உட்கொள்வதும் ஸுன்னத்தாகும்:

நபி (ஸல்) அவர்கள் விரல்களையும் உணவுத் தட்டையும் நக்குமாறு பணித்தார்கள் என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இவ்வாறு பணித்த நபியவர்கள் அதற்கான காரணத்தையும் பின்வருமாறு விளக்கினார்கள்:
நீங்கள் உண்ணும் உணவின் எந்தப் பகுதியில் பரகத் இருக்கிறது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)

. உணவு உட்கொள்ளும் வேளையில் நல்ல, பயனுள்ள விஷயங்களைப் பேசுவது வரவேற்கத்தக்கதாகும்.

. சாய்ந்து கொண்டு உணவருந்துவதும் நபிவழிக்கு முரணானதாகும்.

என்னைப் பொறுத்தவரையில் நான் சாய்ந்து கொண்டு சாப்பிடமாட்டேன் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.

. உண்ணும் உணவைப் பாராட்டுவதும் வரவேற்கத்தக்கது.அதனைக் குறை கூறக் கூடாது.

ரஸுலுல்லாஹ் எந்தவோர் உணவையும் குறைகாண மாட்டார்கள். விரும்பினால் சாப்பிடுவார்கள். விரும்பாவிட்டால் விட்டு விடுவார்கள். மற்றுமோர் அறிவிப்பின்படி, 'விரும்பாவிட்டால் மௌனம் சாதிப்பார்கள். (புகாரி, முஸ்லிம்)

. உணவில் வீண்விரயத்தையும் ஆடம்பரத்தையும் தவிர்த்தல் வேண்டும்.

விரும்பியதை சாப்பிடு. விரும்பியதை அணி. இவற்றில் பிழையானவை இரண்டு பண்புகளாகும். வீண்விரயமும், பெருமையுமே அவை. (இப்னு அப்பாஸ்)

. உணவை அளவாகச் சாப்பிட வேண்டும். '

ஒரு முஃமின் ஒரு குடலால் சாப்பிடுகிறான். ஒரு காபிரோ ஏழு குடல்களால் சாப்பிடுகிறான் என்ற ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

. உணவு உண்டபின் ஓத வேண்டிய துஆக்களை ஓதுதல்.

ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்