மனிதனை புனிதனாக்கும் மாதம் ரமழான்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.

வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல்படும் திறனையும் தந்த வல்ல ரஹ்மானை போற்றி ஆரம்பம் செய்கின்றேன்.

இறை இல்லம் கவ்பதுல்லாவையும் இறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தரிசிக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக?

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு?

மனிதனை புனிதனாக்கும்
                       மாதம் ரமழான்

மகத்தான ரமழான் மாதம் வந்துவிட்டாலே உலக முஸ்லிம்களின் உள்ளங்களிலும் முகங்களிலும் சந்தோஷம் வெளிப்படுவதைக் காண்கிறோம். அந்த அளவுக்கு அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இறை வணக்கங்களிலும் இதர நற்காரியங்களிலும் ஈடுபடுவார்கள். இஸ்லாமிய மாத எண்ணிக்கையின் அடிப்படையில் ஒன்பதாவது மாதமாக ரமழான் உள்ளது.

இதற்கு ஷஹ்ரு ரமழான் – ரமழான் மாதம், ஷஹ்ருன் முபாரகுன் – பரகத் (அபிவிருத்தி) நிறைந்த மாதம், ஷஹ்ருன் அbமுன் – மகத்தான மாதம், ஷஹ்ருஸ் ஸப்ர் – பொறுமையின் மாதம் என்றெல்லாம் பல சிறப்பு பெயர்கள் இந்த மாதத்திற்குண்டு.

எனவே இப்படியெல்லாம் மகத்துவமிக்க ரழானைப் பற்றி தெரிந்த நாம் அது உள்ளடக்கியிருக்கும் விடயம் குறித்தும் அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் அறிய வேண்டும்.

1. ரமமழன் மாதம்:

i இதில்தான் அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.

இதனால்தான் ரமழான் மாதத்தில் பள்ளிவாசலிலும், வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் கூட அதிகமதிகம் அல்குர் ஆனை ஓதக்கூடிய நிலை உண்டாயிற்று, இன்னும் இரவுத் தொழுகையான தராவீஹிலும் கூட முப்பது (30) ஜுஸ் உ குர்ஆனையும் ஓதி தொழுகை நடத்தக்கூடிய ஹாபிழ்களை பள்ளியிலும், வீட்டிலும் அந்த ஒரு மாதத்திற்கான பணியில் அமர்த்துவதும் உண்மையே.

மேலும் ரமழானில் தராவீஹ் தொழுகை முடிந்த பிறகும், வீட்டில் காலை நேரத்திலும் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸ் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும். இப்படியெல்லாம் செய்யக்காரணம் இது அல்குர்ஆனிய மாதம் என்பதினாலாகும். அல்லாஹுதஆலா கூறுகிறான்: “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் இன்னும் நேர்வழியிலிருந்தும், (சத்தியத்தையும் – அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதிலிருந்தும் தெளிவாக்கக்கூடிய சான்றுகளைக் கொண்டதுமான (புர்கான் எனும்) குர்ஆன் இறக்கியருளப்பட்டது. (அல்குர்ஆன் 2:185)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) “ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழானின் ஒவ்வொரு இரவும் – ரமழான் முடியும் வரை நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்” (நூல்:புகாரீ 2/1902)

ii. நோன்பு நோற்பது கடமையான மாதம்:

ஏழைகளின் பசி, வறுமையின் கொடுமை, என்பவற்றை உணர்ந்து, மனித நேயம் காக்க வேண்டும், பிறர் நலம் நாடவேண்டும் என்பதையும் விளக்கி அல்குர்ஆனிய வழியில் அதனை ஓதுவதோடு செயல்படுதிலும் ஈடுபடுவதுடன் ரமழானை கழிக்க வேண்டும் எனவும் உணர்த்துகிறது ரமழான் நோன்பு. அல்லாஹுதஆலா கூறுகிறான், “எனவே உங்களில் எவர் (அப்புனித) மாதத்தை அடைகிறாரோ அதில் அவர் நோன்பு நோற்பாராக!” (அல்குர்ஆன் 2:185) இங்கு மாதம் எனக்குறிப்பிடுவது ரமழான் மாதத்தைத்தான் என்பதாகும்.

2. சுவனத்தின் ஆசை உண்டாகுதல்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமழான் மாதம் வந்துவிட்டால், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன” “வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரி 2/1898, 1899)

இந்த நபி மொழியை அவதானமாக சிந்திக்கும் போது “வானங்களினதும், சுவனத்தினதும் கதவுகளை திறக்கப்படுவது கொண்டும், நரகத்தின் கதவுகள் அடைக்கப்படுவது கொண்டும், ஷைத்தான்களை விலங்கிடுவது மூலமாகவும் ரமழான் மாதம் கெளரவிக்கப்பட்டுள்ளது. இதர பதினொரு (11) மாதத்தைப் பற்றி இப்படி போசப்படவில்லை. ஆனால் ரமழானைப் பற்றியே இப்படி பேசப்பட்டுள்ளது. எனவே சுவனம் செல்வதே குறிக்கோள் என வாழுகிற நாம் சுவனக் கதவுகள் திறக்கப்படுகிற ரமழான் மாதத்தை முறையோடு பயன்படுத்தி சுவனவாதியாக மாற வேண்டும்.

3. பிறர் தேவையை நிறைவேற்றுதல்:

பிறர் தேவையை நிறைவேற்றுதல் என்பது குறிப்பாக ஸதகா – தர்மம் செய்தல் ஸகாத் – கடமையானவர்கள் மாத்திரம் கொடுத்தல் போன்றவற்றை நோக்கலாம்.

ஸகாத் – யார்மீது இது கடமையோ அல்லது யார் தகுதி பெற்றிருக்கிறாரோ அவர் எட்டுக் கூட்டத்தாரர்களில் யாருக்கும் கொடுக்கலாம்.

ஸதகா – யாரும் கொடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள் கூட ரமழான் மாதத்தில் கூடுதலாக தர்மம் செய்திருக்கிறார்கள். தர்மம் செய்வதினூடாக பிறருடைய பசியை போக்க முடியும், அவருடைய கடனைப் போக்க முடியும், அவருடைய குடும்பத்தில் கல்விப்பருவ பிள்ளைகள் இருப்பின் தர்மத்தின் மூலம் கல்விச் செலவுகளைக் கொடுப்பதால் அதில் அவர்களை முன்னேறச் செய்யலாம். வீடு, மலசல கூட வசதியற்றோருக்கு உதவுவது மூலம் நல்லதோர் குடும்பமாக ஒரு சமுதாயமாக மாறுவதைக் கண்டுகொள்ள முடியும்.

எனவேதான் நபி (ஸல்) அவர்கள் வேகமாக வீசும் காற்றைவிட தர்மம்செய்துள்ளார்கள் என்பதை கீழ் காணும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது: “நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்களை சந்திக்கும் வேளையில் நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். (கொடை கொடுப்பார்கள்)…… ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மைச் சந்திக்கும் போது மழைக்காற்றைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்” (நூல் : புகாரீ 2/1902)

4. பாவங்கள் மன்னிக்கப்படுதல்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” “யார் லைலதுல் கத்ரில் (கண்ணியமிக்க இரவில்) நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குவாரோ அவரது முன் பாவம் மன்னிக்கப்படுகிறது” “யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குவாரோ அவரது முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (நூல் : புகாரீ 2/1901, 2008, 2009, 2017).

இந்த ஹதீஸில் “நம்பிக்கையுடனும்” “நற்கூலியை எதிர்பார்த்தும் வணங்குதல்” உடைய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதாவது இதற்கு அரபியில் ‘ஈமானன்’ வ’இஹ்திஸாபன்’ என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியாயின் ஒருவர் அமலில் ஈடுபடும் போது அவர் ‘இக்லாஸ்’ எனும் உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்காகவே இவ்வணக்கம் என்ற எண்ணத்துடன் வணங்க வேண்டும். பிறர் பார்க்கவோ, சோம்பேரியாகவோ வணக்கத்தில் ஈடுபடக்கூடாது.

என்பதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு ரமழானில் இப்படியான அமலில் ஈடுபடும்போது அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இதுதான் ரமழானுக்குண்டான தனிப்பெரும் சலுகையும் அந்தஸ்தும் ஆகும். ஒட்டிய வயிரோடு பசியோடு, தாகத்தோடு, ஆசைகளைக் கட்டுப்படுத்தி அல்லாஹ்வை வணங்கும் மனிதனுக்கு கிடைக்கும் நற்கூலியையே இங்கு சிந்தனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. கூலியில் அபிவிருத்தி:

ரமழானில் செய்யப்படும் அமல்களுக்கு கிடைக்கும் கூலியை விட கூடுதலான கூலியும் அந்தஸ்தும் கிடைக்கிறது, ஒரு அமலுக்கு கிடைக்கவிருக்கும் கூலியை (நன்மையை) விட அக்கூலியில் அபிவிருத்தி செய்யப்படுகிறது உதாரணமாக ஒருவர் ஒரு உம்ரா செய்தால் அவருக்கு ஒரு உம்ராவின் கூலி கிடைக்கும்.

ஆனால் ஒருவர் அதே உம்ராவை ரமழானில் நிறைவேற்றும் போது அந்த உம்ராவானது ஒரு ஹஜ்ஜுக்கு சமமாகிறது. இதைவிடவும் பாக்கியம் நிறைந்ததாகவும் மாறுகிறது. அந்த (ரமழானில் செய்யும்) உம்ரா நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்கு சமமாகிறது. இதனையே கீழ் காணும் நபி மொழி சொல்கிறது.

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ரமழானில் செய்யப்படும் உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு சமமானதாகும். அல்லது என்னுடன் ஹஜ் செய்வதற்கு சமமானதாகும்” (நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

(ரியாளுஸ்ஸாலிஹீன் : 1278)

உண்மையிலேயே ரமழானில் இருக்கக்கூடிய சிறப்பம்சங்கள் பற்றி அல்குர்ஆனும் நபி மொழிகளும் எடுத்துக் காட்டியதை ஒவ்வொரு முஸ்லிமானவரும் அறிந்து அதன்படி செயல்படும்போது மன்னிப்பு, நன்மையில் அபிவிருத்தி, சுவனம் என்பன எமக்கு கிடைக்கும். மேலும் இப்புனித மாதத்தில் தான் பத்ரு யுத்தமும் நடந்தது குறைந்த படை பலத்தைக் கொண்ட முஸ்லிம்கள் கூடிய படை பலமுள்ள காபிர்களை தோற்கடித்தார்கள். முதல் போர் முதல் வெற்றியும் ரமழானில் தான் கிடைத்தது.

எனவே எமது வாழ்வையும் அல்லாஹ்வுக்கு பொருத்தமான முறையில் அமைத்துக் கொள்வதோடு ரமழானின் பரிபூரண கூலியை பெற்றுக்கொள்வோம். அல்லாஹ் எம்மை பொருந்திக் கொள்வானாக ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்!

அனைவரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கு எத்தி வைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்!

ஸல்லல்லாஹூ அலா முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹூ அலா முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹூ அலா முகம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ

அல்ஹம்துலில்லாஹ்

 

Comments

Popular posts from this blog

சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள்: ஆபத்தை தவிர்க்க தெரிந்து கொள்ளுங்க!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

சிந்திக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்